உள்ளூர்

மகள்மாரிடம் உங்கள் ஹீரோ யாரென கேட்டால் வாப்பா என்பார்கள், சுக்ரா ‘உம்மா’ என்றபோது எனக்கு பெருமிதமாக இருந்தது

மகள்மாரிடம் உங்கள் ஹீரோ யாரென கேட்டால் வாப்பா என்பார்கள், சுக்ரா ‘உம்மா’ என்றபோது எனக்கு பெருமிதமாக இருந்தது

சுக்ரா முனவ்வர் , இலங்கையின் காலியைச் சேர்ந்த ஒரு வறிய குடும்பத்துப் பெண். சிரச தொலைகாட்சி நடாத்தும் லக்ஷபதி (லட்சாதிபதி) நிகழ்ச்சியில் வென்றிருக்கிறார்.
20 இலட்சம் பரிசு.

இதை வெட்டியும் ஒட்டியும் சமூக ஊடகங்களில் வாதப் பிரதிவாதங்கள் அமர்க்களப்படுவதால் நேற்று கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர் வெற்றி பெற்ற காணொளியைப் பார்த்தேன். முழுமையாகப் பார்க்கவில்லை.

இந்த லட்சாதிபதி மாதிரியான நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரல், அவற்றை எடுத்து நடாத்துபவர்கள்- இவற்றை ஒரு புறம் தூக்கி வைப்போம். தனிப்பட்ட முறையில் இவ்வகை நிகழ்ச்சிகள் பின்னாலிருக்கும் அரசியல் பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது.

ஆனால் சுக்ராவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அவரது சிங்கள மொழித் திறன் பற்றி புதிதாக அதிசயப்படுவதற்கு எதுவுமில்லை. அதை வைத்து எல்லோரும் சிங்களம் கற்றுத் தானாக வேண்டும் என்ற அடிபணிதல் மனோ நிலைக்கும் நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.

சிங்கள மொழி மூலம் கற்ற அல்லது சிங்களவர் அதிகம் வாழ்கின்ற பிரதேசத்திலிருந்து வரக்கூடிய எவராலும் அந்த மொழியில் பேச முடியும்.

அதற்கெல்லாம் மேலாக சுக்ராவிடம் எனக்கு மிகப்பிடித்த விடயம்.

கண்களை நேராகப் பார்த்துத் துணிச்சலாகப் பேசுவதும் நாலுக்கு மடிந்து, குரலை வளைக்காமல் சொல்ல வந்ததை வெளிப்படையாகச் சொன்ன விதமும்.

பொதுவாக மகள்மாரிடம் உங்கள் ஹீரோ யாரென்று கேட்டால் தயங்காமல் வாப்பா என்பார்கள்.

சுக்ரா ‘உம்மா’ என்ற போது எனக்கு நிரம்பப் பெருமிதமாக இருந்தது. உம்மா தான் வீட்டின் அச்சாணியாய் நின்று எல்லாப் பொறுப்புக்களையும் சுமப்பதைச் சொன்ன அந்த நேர்மை கவனிப்புக்கு உரியது.

பதினேழு வயதுப் பெண்- இலங்கை, அமெரிக்கத் தரத்துக்கு வரும் எனக் கூறும் போது, உலக அரசியல் காய் நகர்த்தல்கள் பற்றிய தெளிவை அவரிடம் எதிர்பார்க்க முடியாது- ஆனால் சுக்ராவுக்கு தனது வாழ்க்கை பற்றியும், பெண் வலுவாக்கம் பற்றியும் ஒரு சரியான கோணம் இருக்கிறது.

பாலித தெவரப்பெரும ஒரு மனித நேயமிக்க அரசியல்வாதி. அவர் தன் மனைவியுடன் சென்று சுக்ராவின் தோள் தட்டி வாழ்த்தியது சிலருக்கு தேள் கொட்டியது போல் ஆகியிருக்கிறது.

வழமை போல்தான் சொல்வது மட்டும் தான் இஸ்லாம் என்று பூதங்கள் கிளம்பியிருக்கிறன.

சுக்ரா வறுமை நிலையிலிருப்பதால் தான் அவ்வாறான ஒரிடத்திற்குச் செல்ல நேரிட்டது என்ற புலம்பல் ஒரு புறம். ஏன் வசதி படைத்திருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு பெண் முன்சென்று தன் திறமையை நிரூபிப்பதில் என்ன பிரச்சினை…?

சுக்ராவுக்கு மார்க்கம் கற்றுக் கொடுக்க இன்னொரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.

அல்லாஹ்வே மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

கலாச்சாரத்தையும் மார்க்கத்தையும் பாதுகாப்பதற்காக பிரம்புகளுடன் புறப்பட்டிருக்கும் சகலமானவர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

நீங்கள் எதுவும் பேசாமலிருப்பது தான் இஸ்லாத்துக்குச் செய்யும் மெத்தப் பெரும் உபகாரம்.

Meanwhile,

Hats off to you Shukra,

The higher we soar, the smaller we appear to those who cannot fly.

So, Fly High girl.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button