இலங்கை பரீட்சைத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்துக்குள் நுழைந்து மாற்றங்களைச் செய்த காலி பாடசாலை ஒன்றின் மாணவன் கைது!

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை Hack செய்து அதற்குள் பிரவேசித்துள்ளது, இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை உத்தியோகபூர்வமாக வெளியிடும் இணையத்தளத்தை தன்னகப்படுத்தினார் எனக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (08) காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவனையே இது தொடர்பில் கைது செய்துள்ளனர்.பரீட்சை முடிவுகளை வழங்கும் இணையதளம், வேறு ஒருவரின் முடிவுகளைச் சரிபார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த மாணவன் அதனை மாற்றி எந்தப் பெயரையும் பதிவு செய்தாலும் முடிவுகளை வெளியிடும் வகையில் வடிவமைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த ஒரு பெயரை உள்ளிடும்போது , அந்தப் பெயரைக் கொண்ட அனைத்து நபர்களினதும் விபரங்களும் அந்த நேரத்தில் காட்டப்படும்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் குறித்த பாடசாலையின் தொழில்நுட்ப பிரிவு மாணவன் என்பதும், அவனது பெற்றோரும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இணையத்தளத்தை சோதனையிட்ட போது அது வேறு நாட்டில் பதிவாகியிருப்பதால் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.