விளையாட்டு

வெறித்தனமா இலக்கை விரட்டிய நியூசிலாந்து..! பாகிஸ்தானுக்கு கைகொடுத்த வெதர்.. முதல் டெஸ்ட் போட்டி டிரா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கடைசி நாள் ஆட்டத்தில் கடைசி 15 ஓவரில் 138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி அதிரடியாக பேட்டிங் ஆட, போதிய வெளிச்சமின்மை காரணமாக 7.3 ஓவரில் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் அகா சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். பாபர் அசாம் 161 ரன்களையும், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அகா சல்மான் 103 ரன்களையும் குவித்தனர். சர்ஃபராஸ் அகமது 86 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 183 ரன்களை குவித்தனர். கான்வே 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். சதமடித்த டாம் லேதம் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது இரட்டை சதத்தை விளாசினார். வில்லியம்சன் 200 ரன்களை குவிக்க, இஷ் சோதி 65 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அபாரமாக ஆடி 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சர்ஃபராஸ் அகமது (53), சௌத் ஷகீல் (55) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, முகமது வாசிம் 43 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் அடித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

நியூசிலாந்து அணிக்கு சவால் விடுக்கும்வகையில், கடைசி நாள் ஆட்டத்தில் 15 ஓவரில் 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி. 15 ஓவரில் 138 ரன்கள் என்ற சவாலை ஏற்று இலக்கை வெறித்தனமாக விரட்டியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து தொடக்க வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி இலக்கை விரட்டினர். கான்வே 16 பந்தில் 18 ரன்களும், டாம் லேதம் 24 பந்தில் 35 ரன்களும் அடிக்க, 7.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 61 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து ஆடிய வேகத்திற்கு இலக்கை விரட்டியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக 7.3 ஓவருடன் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டதால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button